செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு இரண்டாவது முறையும் ஆபரேஷன் நடக்கிறது. அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு வரை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, குழந்தை பெற்ற பெண்களுக்கு, சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படு வதாகவும் இதனால், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மேற்கண்ட சங்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் இணைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இரா.சதீஷ் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரிபாதி பெண்களுக்கு செப்டிக் ஆகிறது. இதனால் அவர்களுக்கு மீண்டும் 2-வது முறை அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
முதல் அறுவை சிகிச்சையை சரியான முறையில் செய்யாததால், பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, மகப்பேறு சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், தங்களை சுத்தமாக, வைத்துக் கொள்ளாததே பிரச்சினைக்கு காரணம் என்று தட்டி கழிக்கிறார்கள்.
ஆனால், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது. ஒருமுறை செப்டிக் ஆன இடத்தில் தையலை நீக்கிவிட்டு, மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதால் அந்த பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்நிலை உள்ளது. கடந்த காலங்களில் இதுபோல் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இதனை கருத்தில் கொண்டு பிரச்சினை குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
சம்பந்தப்பட்ட தாய்-சேய் மகப்பேறு சிகிச்சை தகுந்த பாதுகாப்போடும், சுகாதாரமாகவும் நடக்க வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மகப்பேறு பிரிவு துறைக்கு, சில அறிவுறுத்தல்களை வழங்கி மருத்துவமனை முதல்வர் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.