புதுச்சேரி: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனை புதுச்சேரி விழாவுக்கு பாஜக எம்எல்ஏக்கள் அழைத்து வந்திருந்தனர். அவர் காமராஜர் தொகுதிக்கு முக்கிய பொறுப்புக்கு வரவுள்ளதாக பாஜக எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் காமராஜர் தொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று (நவ.17) நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜான்குமார் மகனான ரிச்சர்ட் எம்எல்ஏ மேடையில் பேசுகையில், "எனது தந்தை ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியை எனக்கு தந்துவிட்டு காமராஜர் தொகுதிக்கு வந்தார். இருவரும் எம்எல்ஏக்களாக உள்ளோம். அவரை விட ஒருபடி மேலாக சார்லஸ் மார்டின் வந்துள்ளார். என் தந்தை செய்ததை விட பல மடங்கு செய்வார். மிக முக்கியப்பொறுப்புக்கு அவர் வரபோகிறார்" என்றார்.
இதுபற்றி ஜான்குமார் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, "நன்றாக படித்தவர், உலக நாடுகளை அறிந்தவர், அங்கு இருப்பவைகளை புதுச்சேரிக்கு கொண்டு வர ஆசைப்படுகிறார்" என்றார்.
புதுச்சேரியில் பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது கூட்டாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனை அழைத்து வந்து விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.