தமிழகம்

பிளவக்கல், ராஜபாளையம் சாஸ்தா கோயில் அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பிளவக்கல் அணையில் இருந்து நாளை (நவ.18) முதல் 6 நாட்களுக்கு, வினாடிக்கு 150 கனஅடி வீதமும், ராஜபாளையம் சாஸ்தா கோயில் அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் 48 நாட்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடி பாசனம் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 38 அடியை தாண்டி உள்ளது.

அதேபோல் 42 அடி உயரம் கொண்ட கோவிலாறு அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கண்மாய் பாசனத்திற்காக நவம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கவும், பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (நவ.18) காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க இருக்கிறார்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் அணை மூலம் 11 கண்மாய்களும், 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக 36 அடி உயரம் கொண்ட சாஸ்தா கோயில் அணை முழு கொள்ளவை எட்டி கடந்த 3-ம் தேதி நிரம்பியது.

அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சாஸ்தா கோயில் அணையில் இருந்து நாளை முதல் 48 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT