சென்னை: நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலர் ந.முருகானந்தத்தை சந்தித்த சட்டப்பேரவை விசிக குழுத் தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான சிந்தனைச் செல்வன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவின் விவரம்: நாட்டின் 75-வது அரசியலைமைப்பு தினத்தை (நவ.26) போற்றும் வகையில் ஒரு நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி சமத்துவம், சமூக நீதி, உடன்பிறப்புணர்வு ஆகிய விழுமியங்களை மேம்படுத்தும் வகையிலும், அதற்காக பாடாற்றிய தலைவர்களை நினைவு கூர்ந்து தீர்மானங்களை இயற்ற வேண்டும்.
அதே நாளில் இதே பொருளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி உறுதி மொழி ஏற்க செய்யலாம். அரசமைப்பு சாசன வரைவு தலைவர் அம்பேத்கரை போற்றும் வகையில், அரசமைப்பு சாசன அவையின் முதல் உரை மற்றும் நிறைவு உரை ஆகியவற்றை தொகுத்து அனைத்து கல்லூரி மாணவர்களிடமும் விலையின்றியோ அல்லது மலிவு விலையிலோ கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் அம்பேத்கர் ஆய்வு இருக்கையை நிறுவ ஆவன செய்ய வேண்டும்.
75-வது குடியரசு தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணத்திலும் கூண்டுக்குள் அரசியல் தலைவர்கள் சிலை இருப்பது தேசிய அவமானம் ஆகும். எனவே, சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்து தேச தலைவர்களையும் போர்த்தியுள்ள இரும்புக் கூண்டுகளை உடனே அகற்ற வேண்டும்.
பாதுகாப்புக்கு நவீன அறிவியல் வடிவங்களை கண்டறிய வேண்டும். ஜப்பார் படேல் இயக்கத்தில் வெளிவந்து கவனிப்பாறின்றி கிடக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படத்தை நவ.26-ம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிட வேண்டும். சாதி ஒழிப்பு உள்ளிட்ட தளங்களில் படாற்றும் ஆளுமைகளுக்கு விருதளித்து பெருமை சேர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.