கண்ணையா 
தமிழகம்

கார்ப்பரேட்டுகள் மூலம் ரயில்வே தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சி: கண்ணையா குற்றச்சாட்டு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கார்ப்பரேட்களின் அறிக்கையை பயன்படுத்தி ரயில்வே தொழிலாளர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எஸ்ஆர்எம்யூபொதுச் செயலாளர் கண்ணையா குற்றம்சாட்டினார்.

அகில இந்திய அளவில் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான தேர்தல் டிசம்பரில் நடக்கிறது. இதையொட்டி, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் எஸ்ஆர்எம்யூ தொழிற் சங்கம் சார்பில், தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. எஸ்ஆர்எம்யூ மதுரை கோட்ட செயலாளர் ஜேஎம்.ரபீக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா பங்கேற்று பேசியது: “ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் விதமாக அம்பானி, அதானிக்கு சாதகமாக ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சியை போன்று ரயில்வே தொழிலாளர்களை பிரிக்க முயற்சிக்கிறது பாஜக அரசு. நமது தொழிற்சங்கங்கள் ஒன்றாக இருக்கவேண்டும்.

ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்து கொடுத்த வத்தே பாரத் ரயில்களை ரஷ்யா, ஜெர்மனி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கி, நமது தொழிலாளர்களை வெளியேற்ற திட்டமிடுகின்றனர். உங்களை காப்பாற்றவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறிக்கையின் அடிப்படையில் ரயில்வே தொழிலாளர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. நாம் கவனமாக இருக்கவேண்டும்.

பயணிகள் ரயில்களைவிட, சரக்கு ரயில்களில் அதிக வருவாய் என கூறி போன்ஸ் குறைக்கின்றனர். ஒவ்வொரு வகையிலும் ரயில்வே தொழிலாளர்களின் உரிமை, சலுகையை மத்திய அரசு பறிக்கிறது. ரயில்களை வெளிநாடு கம்பெனிகளுக்கு விற்கும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க எஸ்ஆர்எம்யூ தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து தொழிற்சங்க தேர்தலில் 90 சதவீதம் வாக்களிக்கவேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘ சென்னையில் நமது ஐசிஎப் ரயில்வே தொழிலாளர்கள் ரூ.98 கோடியில் தயாரித்த 66 வந்தே பாரத் ரயில்களை ரூ.130 கோடிக்கு வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கியுள்ளனர். இந்த ரயில்களை பராமரிக்க நமது ரயில்வே கட்டிடங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், வந்தே பாரத் ரயில்களை ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியவில்லை. மேலும், இளைஞர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கிறது. இத்துறையில் மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்போம். தொழிற்சங்க தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்வோம்,” என்றார்.

SCROLL FOR NEXT