சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 புறப்பாடு, 5 வருகை என 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பெங்களூருவில் வானிலை சரியில்லாததால் சென்னையில் தரையிறங்கிய அபுதாபி விமானத்தின் பைலட், பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி ஓய்வெடுக்க சென்றதால் 168 பயணிகள் தவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு பெங்களூருக்கு செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லி விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னைக்கு அதிகாலை 1 மணிக்கு புனேயில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 9 மணிக்கு பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 5.35 மணிக்கு பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 8.20 மணிக்கு டெல்லி விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்தாகின.
விமான நிலையத்தில் பரபரப்பு: நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள், விமானங்கள் திடீர் ரத்துகாரணமாக பெரும் அவதிக்குள்ளாகினர். 9 விமானங்கள் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று காலை மோசமான வானிலை நிலவியது. அதனால், டெல்லி, மும்பை, மற்றும் அபுதாபிஆகிய இடங்களில் இருந்து பெங்களூரு சென்ற 4 விமானங்களால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து, 4 விமானங்களும் சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டன. இந்த 4 விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர். காலை 9 மணிக்கு பின்னர் பெங்களுருவில் வானிலை சீரானது என்ற தகவல் கிடைத்ததும், டெல்லி விமானமும், 2 மும்பை விமானங்களும் பெங்களூருவுக்கு சென்று தரையிறங்கின.
அதேநேரம், அபுதாபியில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி ஓய்வு எடுக்க சென்றதால், அந்த விமானம் பெங்களூருவுக்கு செல்லாமல் சென்னையில் இருந்தது.
பயணிகள் கோஷம்: பல மணி நேரம் விமானத்துக்குள் இருந்த 168 பயணிகள் ஆத்திரமடைந்து கோஷமிட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, 168 பயணிகளையும் விமானத்தில் இருந்துகீழே இறக்கி, விமான நிலையத்திலேயே சுங்க சோதனை, குடியுரிமை சோதனை போன்றவற்றை நடத்தி முடித்தனர்.
பின்னர், பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அதே விமானத்தில் பயணிகள் அனைவரும் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.