சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாள் விழா, சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வீட்டுக்கு வந்தவர்களை சீமான் மனைவி கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து தொண்டர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. ஆட்டுக்கறி, மீன்குழம்பு போன்றவை பரிமாறப்பட்டது.
சீமான் பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் தனது சமூக பணிகளை தொடர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.