சேலம்: கிருஷ்ணகிரி மாவட்ட தபெதிக அமைப்பாளராக இருந்த பழனி(எ) பழனிசாமி கடந்த 2012-ல் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குபதிவு செய்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது சகோதரர் வரதராஜன், மாமனார் லகுமையா உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது. ஆனால், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருந்ததால், வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று பழனியின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பழனி கொலை வழக்கின் விசாரணையை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றிஉத்தரவிட்டது.
இதன்படி, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் களில் 4 பேர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன்உள்ளிட்ட 22 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
முதன்மை மாவட்ட நீதிபதிசுமதி முன்னிலையில், பழனியின் மகன் வாஞ்சிநாதன் சாட்சியமளித்தார். தொடர்ந்து, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.