அமைச்சர் சி.வெ.கணேசன் | கோப்புப்படம் 
தமிழகம்

நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தில் அதிகளவில் சேர்க்க அமைச்சர் உத்தரவு

கி.கணேஷ்

சென்னை: கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை, வீட்டுவசதித் திட்டத்தில் அதிகளவில் சேர்க்கும்படி அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து இன்று (நவ.8) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியது: “தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த வீட்டுவசதி திட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அதிகளவில் பயனாளிகளை மாவட்டம் தோறும் சேர்க்க, உரிய நடவடிக்கைகளை கொள்ள வேண்டும்,” என்று அவர் பேசினார். இந்த கூட்டத்தில், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவராவ், தமிழ்நாடு கட்டுமான வாரிய செயலாளர் க.ஜெயபால் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT