தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நள்ளிரவில் வந்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

செய்திப்பிரிவு

நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த நடிகர் விஜய் அதிகாலை 1.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாட்சன், ஜான்சி, ஸ்னோலின் ஆகியோரது வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்பு, சுமார் 2.15 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றார்.

பகல் நேரத்தில் ரசிகர்கள் கூடி விடுவார்கள் என்பதால் நள்ளிரவில் வந்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT