தலித் சிறுவனை காலணி சுமக்க வைத்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட பி.சி.ஆர். (சிவில் உரிமை பாதுகாப்பு) நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா வடுகபட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகன் வடுகபட்டியில் உள்ள கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3.6.2013-ல் பள்ளிவரை சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் காலில் செருப்பு அணிந்திருந்தார்.
இதைப் பார்த்த அதே ஊரை சேர்ந்த நிலமாலை மற்றும் இருவர், நீ எப்படி காலில் காலணி அணிந்துகொண்டு இப்பகுதியில் செல்லலாம் என்று திட்டியுள்ளனர்.
மேலும், இங்கிருந்து நாடக மேடை வரை காலணிகளை தனது தலையில் வைத்துக்கொண்டு சுமந்து செல்ல வேண்டும் என்றும், அதன் பின்னர் வீடு வரை அவற்றை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் சிறுவனிடம் நிலமாலை கூறியுள்ளார். எனவே, சிறுவனும் தலையில் காலணியுடன் நடந்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சிறுவனின் தாயார் நாகம்மாள் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்த வழக்கு மதுரை மாவட்ட பிசிஆர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரப்பன், நிலமாலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.