புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை கடப்பாரையால் சேதப்படுத்திய அருட்செல்வி. 
தமிழகம்

‘மதுவால் பிரச்சினை; எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை’ - விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்மணி

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது. எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஒரு பெண்மணி ஆவேசமாக உடைத்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் - புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குவந்த போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி(42) என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர். ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அருட்செல்வி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்று அக்கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT