தமிழகம்

உச்சிப்புளி ரயில்வே கேட் திடீர் பழுது: ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி ரயில்வே கேட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உச்சிப்புளியில் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று (நவ.4) அதிகாலை சென்னையிலிருந்து மண்டபம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக, இந்த கேட் மூடப்பட்டது. ரயில் கடந்து சென்றபிறகும் கேட்டை திறக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்ய முயன்ற போது கேபிள் அறுந்து பழுது ஏற்பட்டது தெரியவந்தது.

அதிகாலை சுமார் 4 மணிக்கு முன்பு பூட்டப்பட்ட ரயில்வே கேட், சுமார் ஏழரை மணி நேரத்துக்குப் பிறகு காலை 11.30 மணியளவில் சரி செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ராமேசுவரத்திலிருந்து வந்த வாகனங்களும், ராமநாதபுரத்திலிருந்து வந்த வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீஸார் நிறுத்தப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகனங்கள், இருமேனி கிராம சாலை வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

SCROLL FOR NEXT