தமிழகம்

ரயிலை நிறுத்திய சோத்து மூட்டை

செய்திப்பிரிவு

அண்மையில், ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தான் ரயில்வே துறைக்கு வருவதற்கு முன்பு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை வேடிக்கையாகக் கூறினார். “திருத்துறைப்பூண்டி கோடியக்கரை இடையே சென்ற பயணிகள் ரயிலில் வேதாரண்யம் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு கிராமத்துக்கு கோஷ்டியினர் சோத்து மூட்டையுடன் ஏறினர்.

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சுற்றுலா போவதுபோல படுகுஷியாக இருந்ததால் அந்த பெட்டியே அமர்க்களப்பட்டது. அப்போது, பெரிய அண்டாவில் சாப்பாட்டை வைத்து, அதை வேஷ்டியால் சுற்றி கட்டி எடுத்து வந்திருந்த சோத்து மூட்டையை எங்கே வைப்பது என்று ஒருவர் யோசித்தார். உட்காரவே இடமில்லை. சோத்து மூட்டையை கீழே வைத்தால் காலில் மிதிபடும் என்று யோசித்த அவர், அவசரத்துக்கு ரயிலை இழுத்து நிறுத்தும் கம்பியில் சோத்துமூட்டையை கட்டித் தொங்கவிட்டார்.

உடனே ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், ‘யார் இந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியது?’ என்று அண்டா தொங்கிக் கொண்டிருத்ததைப் பார்த்துக் கேட்டார். ’’நான்தான்’’ என்றார் சம்பந்தப் பட்டவர். ’இப்படி சோத்து மூட்டையை தொங்க விட்டால் ரயில் எப்படிப் போகும்?’ என்று டிக்கெட் பரிசோதகர் கேட்க, அதற்கு, “இத்தனை பேரை இழுத்துட்டுப் போகிற ரயில், இந்த சோத்து மூட்டையை இழுத்துட்டுப் போகாதா?’ என்று வெகுளித்தனமாக கேட்டாராம் அந்தப் பயணி. இதைக் கேட்டு அங்கிருந்த மற்ற பயணிகள் மட்டுமல்லாமல் டிக்கெட் பரிசோத கருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

டி.செல்வகுமார்

SCROLL FOR NEXT