தமிழகம்

ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு அமலுக்கு வந்தது

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியாக இருந்தது. அதேநேரத்தில், இவ்வாறு முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்கள் பலர் தாங்கள் பயணம் செய்யும் தேதிக்கு முன்பாக சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்து விடுகின்றனர். இவ்வாறு ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்வதில் சிலமுறைகேடுகளும் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ரயில் பயணடிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயி்ல்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறை நவ.1-ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT