தமிழகம்

தமிழகத்தில் 150 இடங்களில் பட்டாசு விபத்து: 544 பேருக்கு தீக்காயம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பட்டாசு வெடித்ததால் 150 இடங்களில் தீ விபத்தும் 544 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடிக்கும்போது, விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், தீபாவளி தினத்தில் 150 இடங்களில் தீ விபத்துகளும், 544 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையன்று, தமிழகத்தில் உள்ள 368 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் 800 வீரர்கள் பணியில் இருந்தனர். குறிப்பாக, சென்னையில் கடந்த ஆண்டு பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் மழை காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீ விபத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 254 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் மட்டும் 102 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 150 இடங்களிலும், சென்னையில் 48 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், பட்டாசு வெடித்ததில் சென்னையில் 95 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 544 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்; ஓர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பட்டாசு வெடித்ததில் 794 பேருக்கு தீக்காயமும், ஓர் உயிரிழப்பும், 2022-ம் ஆண்டு 1,317 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. தீபாவளி தீ விபத்து தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது என்றனர்.

SCROLL FOR NEXT