கமுதி: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மத்திய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட 120 சமூக வலைதள சேனல்களை முடக்கியுள்ளோம், என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவரின் கனவை நிறைவேற்றிக் கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
மீனவர் விவகாரத்தில் இருநாட்டு கூட்டுக்குழு பேச்சு வார்த்தையில் மீனவ பிரதிநிதிகளை நியமனம் செய்தால், அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மீனவர்களுக்கான 65 சதவீத நிதியை மத்திய அரசு தருகிறது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மத்திய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட 120 சமூக வலைதள சேனல்களை முடக்கிஉள்ளோம். இன்னும் பல சேனல்களை முடக்க உள்ளோம்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செய்திகளை பதிவு செய்யும் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஒளிபரப்புக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு ஊடக வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டுள்ளது, என்றார்.