சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. | படம்: ம.பிரபு | 
தமிழகம்

595 பூங்காங்களை தனியார் பராமரிக்க மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி: செனாய் நகர் அம்மா அரங்கம் வாடகை உயர்கிறது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி நிதி நிலையைக் கருத்தில் கொண்டும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் சென்னையில் உள்ள 595 பூங்காக்கள், செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி. தியாகராய அரங்கம், வியாசர்பாடி உள்பட 9 இடங்களில் உள்ள கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு அரசு திட்டங்களின் மூலமாக புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகிறது.

அனைத்து பூங்காக்களையும் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக பராமரித்தால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தற்போது 89 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும் 168 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமும் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 595 பூங்காக்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 மண்டலங்களில் உள்ள 595 பூங்காக்களை பராமரிக்க பேக்கேஜ் முறையில் ஒப்பந்தம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேலும் செனாய் நகர், பீட்டர் சாலை, நொளம்பூர், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெரு ஆகிய இடங்களில் கோசாலை அமைக்கப்படுகிறது. மேலும், 197-வது வார்டு இஸ்கான் கோயில் அருகே உயிர் இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடம் அருகில் ஒருங்கிணைந்த கோசாலையும் அமைக்கப்படுகிறது.

செனாய் நகர் அம்மா அரங்கம், தி. நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கம் ஆகியன போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் வாடகையை மறு நிர்ணயம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அம்மா அரங்கத்தின் தற்போதைய ஒருநாள் வாடகை ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 400.

இதனை ரூ.4 லட்சமாக உயர்த்தலாம் என்றும், அதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2.06 கோடி நிரந்தர வருமானமாக கிடைக்கும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுபோல, தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராஜ அரங்கத்திற்கு தற்போதைய ஒருநாள் வாடகை ரூ.20,650. இதனை ரூ.50 ஆயிரமாக நிர்ணயம் செய்யலாம் என்றும் அதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.16 லட்சம் நிரந்தர வருமானமாக கிடைக்கும் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

வியாசர்பாடி முல்லைநகர், நேவல் ஆஸ்பிட்டல் ரோடு, திரு.வி.க.நகர் விளையாட்டு மைதானம், ரங்கசாயி விளையாட்டு மைதானம், கே.பி. பூங்கா விளையாட்டு மைதானம், மேயர் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள அம்மா மாளிகை, காமகோடி நகர், சோழிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களில் விளையாட ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் விமலா (41-வது வார்டு) பேசுகையில், “கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. கட்டணமும் வசூலிக்கக்கூடாது" என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது மேயர் ஆர்.பிரியா பேசுகையில், “கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தத் திடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான பராமரிப்பு செலவும் அதிகம். எனவே, இலவசமாக அனுமதிக்க முடியாது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றபடி கட்டணத்தை குறைத்து நிர்ணயிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார். மாநகராட்சிக் கூட்டம் முடிந்ததும், வார்டு உறுப்பினர்கள் 200 பேருக்கும் கையடக்க கணினி (டேப்) வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT