தமிழகம்

காலில் விழுந்து வணங்கச் சொல்லி பொறியியல் கல்லூரி மாணவரிடம் ராகிங்: உருட்டுக் கட்டையால் தாக்கியதால் கைகளில் எலும்பு முறிவு

செய்திப்பிரிவு

மன்னார்குடி தனியார் பொறியி யல் கல்லூரியில் காலில் விழச் சொல்லி ராகிங் செய்த மாணவர் கள் உருட்டுக் கட்டையால் தாக்கிய தில், மாணவர் ஒருவர் கைகளில் எலும்பு முறிவுகளுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகர் 17-ம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். இவர்களின் மகன் ஜெகன்(22).

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஜெகன் டிப்ளமா (டிஇஇஇ) முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற அவரை, வாசலிலேயே வழிமறித்த மாணவர்கள் சிலர், தங்கள் காலில் விழச் சொல்லி ராகிங் செய்தனராம். மறுத்த ஜெகனை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுக்கத் தாக்கியதில், கைகள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, ஜெகன் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீஸா ரிடம் அளித்த புகாரில், “திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற என்னை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அழைத்து, தங்களை அண்ணன் என அழைக்கக் கூறினர். நானும் கூறினேன். பின்னர், காலில் விழுந்து வணக்கம் சொல்லச் சொன்னார்கள். நான் முடியாது என்று கூறிவிட்டு, வகுப்புக்குச் சென்றுவிட்டேன். அப்போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

மாலையில், வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மாணவர்கள் மீண்டும் என்னைக் காலில் விழச் சொன்னபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுதும் தாக்கி, கீழே தள்ளி மிதித்தனர். மீண்டும் கல்லூரிக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தாக்கியதில் எனது இரு கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT