வழக்கறிஞர் கே.பாலு 
தமிழகம்

மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் இல்லத்துக்கான பாதுகாப்பு வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத் தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார்.

கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.மணிக்குமார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறி பாமக வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

அப்போது வழக்கறிஞர் கே.பாலு, “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறை அவரது இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர் தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சூழலில் அவரது இல்லத்துக்கான போலீஸ் பாதுகாப்பை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டும்,” எனக் கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள சம்பந்தப்பட்ட குழுவிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT