கடலூர்: கடலூரில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று குடும்பத்துடன் பேரணியாகச் சென்று என்எல்சி நிர்வாகத்திடம் கேட்கப்படும் 20 சதவீத போனஸ் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 19 மாதங்களாக 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை நிறுத்த அறிவிப்புக் கூட்டம் நெய்வேலி மெயில் பஜார் காமராஜர் சிலை அருகில் நடந்தது. என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
தலைவர் அந்தோணி செல்வராஜ், செயலாளர் செல்வமணி, சிறப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் 20 சதவீத போனஸ் வழங்க கோரி பேசினார்கள். முடிவில், 28ம் தேதி காலையில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டனர். அதன், பிறகு தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை அளிக்க உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.
அதன்படி, இன்று (அக்.28) காலை கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் இருந்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். சங்கத்தின் கவுரவ தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைவர் அந்தோணி செல்வராஜ், செயலாளர் செல்வமணி சிறப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமாகச் சென்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ‘என்எல்சி இந்தியா நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.