சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டையில் பல ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் அங்காடியால் சுற்றுப்புறங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது. அங்கு கழிவு மேலாண்மை முறையாக செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், புதிய அங்காடி கட்டித்தரப்படும் என மாநகராட்சி உறுதியளித்திருந்தது. அதன்படி, மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில் மீன் அங்காடி அமைக்கப்படுகிறது.
இந்த அங்காடி புயலால் சேதமடையாத வகையில் சென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டு பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட் கட்டமைப்புக்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால், வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப் பட்டு வருகின்றன.
இப்பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், 6 மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, ஓராண்டுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது, “சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.” என்றார்.