சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நேற்று நடைப்பெற்றது இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் பங்கேற்றனர். 
தமிழகம்

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லால் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்த நிதியை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்தார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடியில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது.

சமீபத்திய மத்திய அரசின் ஒப்புதலின் மூலம், இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக்கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். இந்த நிதியை விரைந்து வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் தலைமை வகித்து ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் 2007-ம் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகளை தொடங்கியது. ரூ.22,150 கோடி மதிப்பில் 54.1 கி.மீ தொலைவுக்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால், சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.19,229 கோடி செலவிடப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில், இரண்டாவது கட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது கட்டத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், விமானநிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்துக்கும், தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களான கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்க மத்திய அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, ஏற்கெனவே மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிதியை விரைவில் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லாலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

தமிழக அரசுக்கு பாராட்டு: பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்சார திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கார்பன் மூலம் ஏற்படும் மாசுவை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மின்சாரத் துறை எடுத்து வருகிறது. குறிப்பாக, வரும் 2070-க்குள் கார்பன் மாசு இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT