சென்னை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு ரூ.345.78 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (அக்.25) வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு , ரூ.366 கோடியில் 65 ஆயிரம் மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அளவில் தினசரி 12.34 மில்லியன் லிட்டர் மற்றும் சிப்காட் எறையூர் 1.65 மில்லியன் லிட்டர் மற்றும், பாடலூருக்கு 2.20 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு தேவையான நீர் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் அருகில் அமைக்கப்படும், 1 நீர் சேகரிப்பு கிணறு மற்றும் 2 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், 14,706 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 65 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை, ரூ.345.78 கோடி மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடமிருந்து கடன், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் மானியம் ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்கா ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.