மதுரை: நெல்லை பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் டாக்டர் சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதுக்கு எதிராக போராட்டம் நடத்திய எஸ்எஃப்ஐ-க்கு ஏபிவிபி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தென் தமிழக மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் மதுரையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் டாக்டர் சவிதா ராஜேஷ் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை கண்டித்து எஸ்எஃப்ஐ சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். சவிதா ராஜேஷ் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர், ஏறக்குறைய இருபது வருட ஆசிரியர் அனுபவம் கொண்டவர். ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர், முன்னாள் செனட் உறுப்பினர், முன்னாள் ஆய்வுக் குழு உறுப்பினர், கட்டுரையாளர், டிஎம்ஆர்டி இயக்குநர், பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பாளர், கன்னியாகுமரியில் உள்ள இந்திய இளைஞர்கள் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சிறந்த இதழ்கள் உட்பட சுமார் நாற்பது படைப்புகளை வெளிட்டிருப்பவர்.
இவ்வளவு சிறந்த கல்வியாளர் சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதில் உங்களுக்கு இன்னும் சிக்கல் இருந்தால் கண்ணீர் விட்டு கதறுங்கள். ஏனெனில் தமிழகத்தின் உயர் கல்வித்துறையை சீரழித்த இடதுசாரி திராவிடக் கூட்டணிகளுக்கு எதிரான குரல் எப்போதும் இருக்கும். பல்கலைக்கழகத்தில் பிரிவினையை தூண்டும் இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ-யை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.