தமிழகம்

சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘20 ஆண்டுகளாக இல்லை, சோழர்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும். ஏற்கெனவே, 162 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி தற்போது 112 ஏக்கராக சுருங்கிவிட்டது’’ என கருத்து தெரிவித்தனர்.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், ‘‘உரிய பட்டா வழங்கப்பட்டு அப்பகுதி மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும்’’ என்றார்,

அப்போது நீதிபதிகள், ‘‘மழைக்காலத்தில் அந்த பகுதி மக்கள்தான் பாதிக்கப்படுவர் என்பதை கருத்தில்கொண்டே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம்’’ எனக்கூறி, வழக்கில் அப்பகுதி பொதுமக்களையும் இணைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்தை நியமித்த நீதிபதிகள், விசாரணையை நவ.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT