தமிழகத்தில் 100 அரசு மருத்துவ மனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் ரூ.5 கோடியில் கிருமிநாசினித் தடுப்பு முறைகள் (நானோ சர்பேஸ் ஷீல்ட்) அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசுகையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:-
5,654 நான்காம் நிலை யானைக் கால் நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாத உதவித் தொகை, ரூ.400-லிருந்து ரூ.1000-ஆக உயர்த்தி வழங்கப்படும். பிரசவத்தின் போது ரத்தப் போக்கினால் ஏற்படும் பேறுகால இறப்பை தடுக்கும் பொருட்டு, பிரசவித்த பெண்களுக்கு உயிர் காக்கும் 2,000 பிரத்யேக உடைகள் ரூ.60 லட்சத்தில் வழங்கப்படும்.
‘108’ ஆம்புலன்ஸ் மற்றும் பிரசவம் நடைபெறும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தேவைக்கேற்ப அவை வழங் கப்படும். புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை எழும்பூர் குழந்தை கள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் சிகிச்சை பிரிவுகளை ரூ.3 கோடியில் சீரமைத்து உபகரணங்கள் வழங்கப்படும். சென்னை ஸ்டான்லி, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.2.7 கோடியில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் டிஜிட்டல் ஊடுகதிர் கருவி நிறுவப்படும்.
யோகா முதுகலைபடிப்பு
இயற்கை மருத்துவம், யோகா மற்றும் அக்குபஞ்சர் ஆகிய 3 மூன்று பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 மாணவர் சேர்க்கையுடன் மூன்றாண்டு முதுகலைப் படிப்புத் தொடங்கப்படும். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சைப் பிரிவுகளின் பயன் பாட்டுக்காக 35 வென்டிலேட்டர் கருவிகள், ரூ.2.10 கோடியில் வழங்கப்படும்.
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புறநோயாளி கள் பிரிவுக்குப் புதிய கட்டிடம் கட்டப்படும். 100 அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை அரங்குகளில் ரூ.5 கோடியில் கிருமிநாசினித் தடுப்பு முறைகள் (நானோ சர்பேஸ் ஷீல்ட்) அமைக்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
நானோ சர்பேஸ் ஷீல்ட் எப்படி செயல்படும்?
“அறுவைச் சிகிச்சை அரங்குகளில் சில நேரங்களில் கிருமித் தொற்று காரணமாக, நோயாளி இறக்கவும் நேரிடுகிறது. அது போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக, அவ்வரங்குகளில் கிருமியே புகாத அளவுக்கு தடுப்பு ஏற்படுத்தப்படும். அதற்காக அந்த அறைகளில் பிரத்யேக ரசாயனப்பூச்சு (டைட்டானியம் டையாக்சைட்) பூசப்படும்.
மேலும், கிருமிநாசினி பண்புகளுடன் கூடிய புறஊதா கதிர்களை வெளிப்படுத்தும் சிறப்பு விளக்கு (அல்ட்ரா வைலட் வித் ஜெர்மிசைடல் எஃபெக்ட்) 10 நிமிடங்களுக்கு எரியவிடப்பட்டு அறை முழுவதும் அந்த கதிர் நிரப்பப்படும். இதன் மூலம் அந்த அறையில் இருக்கும் கிருமிகள் முழுவதும் அழிந்து போகும்,” என்று மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.