சென்னை: தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அல்லாத போலீஸ் அதிகாரிகளின் பணித் திறன் முதன் முறையாக மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் பணித்திறனுக்கு ஏற்ப வருடாந்திர ரகசிய அறிக்கை அல்லது வருடாந்திர செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கையானது காகித வடிவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடாந்திர ரகசிய அறிக்கை, காவல் அதிகாரிகள் தங்கள் பணிகாலத்தில் பல்வேறு நிர்வாக செயல்முறைகளான பதவி உயர்வு, அயல்பணி, பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் பணியிடமாறுதல்கள் ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த வருடாந்திர ரகசிய அறிக்கை காகித வடிவில் பெறப்படுவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் ஐபிஎஸ் அல்லாத எஸ்.பி வரை உள்ள அதிகாரிகளுக்கான வருடாந்திர ரகசிய அறிக்கை இணையவழி வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ‘SPARROW’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயலியின் இயக்கத்தை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் காவல்துறையினர் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகளுக்கு வருடாந்திர ரகசிய அறிக்கையை மின்னணு முறையில் உருவாக்கி செயலாக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.