தமிழகம்

பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வரும் படூர் குளத்தில் குப்பைகளை கொட்ட தடை வேண்டும்: ஊராட்சி நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமத்தில் உள்ள குளத்தில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சுற்றுச்சுவர் அமைத்துப் பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சி 1-வது வார்டில் 9 ஏக்கர் பரப்பளவில் தண்ணீருடன் உள்ள கிராமப் பொதுக்குளம் அந்த ஊருக்கே குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. பின்னர், முறையான பராமரிப்பு இல்லாததால் கரையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் பெற்று வந்தனர்.

ஊராட்சி நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிக்காததால் அருகில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் குப்பைகள், குளத்தில் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றத்துடன் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, படூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுதாகர், “குளத்தை முழுமையாகப் பராமரிக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, ஏரியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து வழங்கப்படும் குடிநீரும் பழுப்பு நிறத்தில் வருவதால், மக்கள் அதனைப் பருக முடியாமல் கேன் தண்ணீரை வாங்கிப் பருகும் நிலை உள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகம் குளத்தைப் பராமரித்து நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, “படூர் ஊராட்சியில் உள்ள கிராமப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட குளத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

          
SCROLL FOR NEXT