கோப்புப் படம் 
தமிழகம்

‘தீபாவளி போனஸ் கூட வேண்டாம்; உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்குக’ - தமிழக அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை

சி.கண்ணன்

சென்னை: “தீபாவளி போனஸ்கூட எதிர்பார்க்கவில்லை. அரசு மருத்துவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும், ஊதியமும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் புத்தகம் கட்டுநர்களுக்கான பயிற்சி 21 பேருக்கு வழங்குவதை நிறுத்தக்கூடாது என்று பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூலக துறையைப் பொறுத்தவரை, நவீன காலத்துக்கேற்ப மின் நூலகங்களாக மாற்றும் பணி நடைபெறுகிறது. அரசு அச்சகத்தில் நவீன ரக இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நூல் கட்டுநர் பயிற்சியை முடித்த பார்வை மாற்றுத்திறனாளி நபர்கள், நவீன இயந்திரங்களை இயக்க இயலாது என சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக, நூல் கட்டுநர் பயிற்சியை நிறுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சில அம்சங்களை உள்ளடக்கிய இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அரசாணை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் உடனே திரும்பப் பெறுவதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, குறிப்பிட்ட அரசாணையை அரசு வாபஸ் பெற்றுள்ளதை நாம் வரவேற்கிறோம். மனிதநேயத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துகளை நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், திமுக ஆட்சி அமைந்ததும் அரசாணை 354 அமல்படுத்தப்படும் என நம் முதல்வர் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும் மூன்றரை ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் விளிம்பு நிலை மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரிதும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளைத் தான். அப்படியிருக்க அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய சம்பளத்தை கூட தர மறுப்பது நியாயமா?

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்கள் உட்பட வருடத்தில் 365 நாட்களும் அரசு மருத்துவமனைகள் தடையின்றி இயங்க அரசு மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம். இருப்பினும் மருத்துவர்களின் தியாகத்துக்கும், உழைப்புக்கும் உரிய அங்கீகாரமும், ஊதியமும் தரப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மருத்துவர்கள் தீபாவளி போனஸ் எதுவும் எதிர்பார்க்கவில்லை.

தரப்பட வேண்டிய ஊதியத்தை மட்டுமே தான் அரசிடம் எதிர்பார்க்கிறோம். 2021-ம் ஆண்டு தீபாவளியின் போது அரசு மருத்துவர்களை முதல்வரிடம் அழைத்துச் சென்று கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை சொன்னதைச் செய்யவில்லை.

எனவே, இந்த ஆண்டு தீபாவளி பரிசாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009-ம் ஆண்டு கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அந்த அரசாணையின்படி அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும். அத்தகைய அறிவிப்பை அமைச்சர் வெளியிடும் போது, பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்கள் அறிவித்துள்ளது போல, அரசு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுவது குறித்த அறிப்பை வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT