தமிழ்நாடு மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு | 
தமிழகம்

பிரத்யேகமான சட்டத்தை அமல்படுத்த கோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான பிரத்யேகமான சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி சென்னையில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.சத்தியநாராயணன் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து பி.சத்தியநாராயணன் கூறியதாவது:

மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட துணை போகும் விதமாக, மத்திய அரசின் மருந்து கொள்கை அமைந்துள்ளது. விலை நிர்ணய கொள்கையை மாற்ற வேண்டும். மக்கள் சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருந்துதுறை பொது நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. அவற்றை புனரமைத்து மீண்டும் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது.

மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு நிலையான வேலை விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கவில்லை. இதனால், மருந்து நிறுவனங்கள் கடுமையான பணிச்சுமையை திணிக்கின்றன. வியாபார இலக்கை அடையாதவர்களுக்கு வேலை நீக்கம், வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம், ஊதிய வெட்டு என பழி வாங்குகின்றனர்.

எனவே மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு நிலையான வேலை விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அவர்களுக்கான பிரத்யேக சட்டமான SPE ACT (1976) சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மின்னணு சாதனங்கள் மூலம் தனிமனித உரிமை மீதான கண்காணிப்பு மற்றும் ஊடுருவலை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT