திருநெல்வேலி: திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக, மாணவர்கள் தரப்பிலிருந்து புகார்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலியிலுள்ள ஜால் நீட் தேர்வு மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்ததாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அம்மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். ஜலாலுதீன் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அங்கு செயல்படும் மாணவியர் விடுதிக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் கேரளத்துக்கு தப்பி சென்றுவிட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் தரப்பிலிருந்து எவ்வித புகார்களும் அளிக்கப்படவில்லை என்றும், அங்கு பணியில் இருந்த அமீர் ஹூசைன் என்பவருக்கும், பயிற்சி மைய நிர்வாகத்துக்கும் இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக வீடியோக்களை பரப்பியுள்ளதாகவும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி பற்பகுளம் மேட்டுக்குடி ஜெயஜோதிநகரை சேர்ந்த வினோதினி என்பவர் அளித்துள்ள மனு: “எனது மகன் ஜால் நீட் அகாடமியில் பயின்று வருகிறார். இந்த அகாடமியில் எனது மகனை அடித்து கொடுமைப்படுத்தியதாக வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை வேண்டுமென்றே, இந்த அகாடமியில் வேலை செய்த அமீர் ஹுசைன் என்பவர் சித்தரித்து விடியோவை வெளியிட்டு எனது மகனுடைய வாழ்க்கையில் கஷ்டத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அகாடமியில் இதுவரை 16 நபர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள். அமீர் ஹுசைன் தனது சுயலாபத்துக்காக, எனது மகனின் வாழ்க்கையை வீணடிக்கும் வகையில் இந்த வேலையை செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து இந்த அகாடமியில் எனது மகன் பயின்று வருகிறார். நீட் தேர்வு நெருங்கிவரும் நிலையில், எனது மகன் இந்த அகாடமியில் நல்லபடியாக படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கடையநல்லூரை சேர்ந்த ஆமீனா நர்கீஸ் உள்ளிட்டோரும் ஆட்சியரிடம் தனித்தனியாக மனுக்களை அளித்துள்ளனர்.