தமிழகம்

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்: ஏஐசிசிடியு

பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: சட்டப்பேரவை தேர்தலில் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏஐசிசிடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலின் (ஏஐசிசிடியு) சென்னை பெருநகர மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை மாவட்ட தலைவர் அ.ஆபிரகாம் தலைமையில் வண்டலூரில் நடைபெற்றது. இதில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24,25,26 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஏஐசிசிடியு அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், திமுக அரசு தேர்தலில் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், 10,000 உறுப்பினர் சேர்க்கை செய்யவும், மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சம் திரட்டுவது என்றும், கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்கிடக் கோரி ஜனவரி 7-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.பாலாஜி, மாநிலச் செயலாளர் உ.அதியமான், மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT