மீஞ்சூர் அருகே இரண்டு ஏரிகளை இணைத்து உருவாக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கம் 
தமிழகம்

சென்னை குடிநீர் தேவைக்காக மீஞ்சூர் அருகே இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்க பணி தாமதம்

டி.செல்வகுமார்

சென்னை: சென்னை குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே 2 ஏரிகளை இணைத்து புதிய நீர்த் தேக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி கொள்ளளவை அதிகரிக்க ஓராண்டுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள இரட்டை ஏரிகளான காட்டூர், தட்டமஞ்சியின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டமும், கடல்நீர் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நபார்டு வங்கி நிதியுதவிடன் ரூ.62 கோடியே 34 லட்சத்தில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள 2020-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து உபரிநீர் காட்டூர், தட்டமஞ்சி ஏரிகளுக்கு வருகிறது. இந்த இரண்டு ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தி, தூர்வாரி புதியநீர்த்தேக்கம் உருவாக்குவதே இத்திட்டமாகும். புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படும் போது அதன் கொள்ளளவு 58.27 மில்லியன் கனஅடியில் இருந்து 350 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும்.

இதுகுறித்து நீ்ர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி தொடங்கப்பட்டது. 2 ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கரைகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. 10 மதகுகள் இடிக்கப்பட்டு, புதிதாக 10 மதகுகள் கட்டப்பட்டுள் ளன. கலங்கள், வரத்துக்கால்வாய் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆரணியாற்றின் வெள்ளதடுப்புக் கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீர் செறிவூட்டும் கட்டமைப்புப் பணிகள், சாலையில் சிறிய பாலம், கடல்நீர் ஊடுருவலைக் கட்டுப்படுத்த கதவணை கட்டுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்தாண்டு பிப்.22-ம் தேதி முடிக்கப்பட்டுவிட்டன. அதேநேரம், ஏரியின் கொள்ளளவை 350 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் பணி மட்டும் பாக்கி உள்ளது.

இன்னும் 2 லட்சத்து 25 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இப்பணி முடிந்த பிறகே புதிய ஏரியில் தண்ணீரைத் தேக்க முடியும். அவ்வாறு தேக்கி வைக்கும்போது, பெருநகர சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். மேலும், 5804.38 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.

SCROLL FOR NEXT