சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் பெண் நிர்வாகியான அஞ்சலையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காவல் துறை தரப்பில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலையை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அஞ்சலையின் மகள் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், எனது தாயாருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இந்நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனது தாயார் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.