சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பிரதான பாதைக்கு பதிலாக லூப் லைன் எனப்படும், கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சென்னையில் இரண்டு நாள்கள் 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்திச் சென்றார். இதுபோல, தமிழக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டிஎஸ்பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நிலைய மேலாளர், பாய்ன்ட்மேன், விபத்து நடைபெற்ற நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து, விசாரணை நடைபெறும் நிலையில், இந்த விபத்தின் பின்னணியில் சதிவேலை இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக ரயில்வே போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொடர் அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி, போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது: இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் குறிப்பிட்ட சில போல்டுகள், நட்டுகள் கழட்டப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைவைத்துப் பார்க்கையில், விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இனியும் இதுபோல, விபத்து நடைபெறமால் தடுக்க, ரோந்துப் பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து ரோந்து மேற்கொள்ளும். இதுதவிர, மாநில போலீஸாரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரோந்துப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில போலீஸார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரோந்து மேற்கொள்ளவதன் மூலமாக, சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தடுக்கவும் முடியும். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதன்மூலம், பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.