ரா.முத்தரசன் 
தமிழகம்

‘பதவிக்குப் பொருந்தாத அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்’ - முத்தரசன்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தி மொழி வெறியை வெளிப்படுத்தியதை மறைத்து முதல்வர் மீது எதிர் குற்றச்சாட்டை, ஆளுநர் கூறுவது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் நேற்று (18.10.2024) நடந்த ‘இந்தி தினவிழா’வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி தவிர்த்து பாடியதற்கு அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்கு பதில் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழ் தாய் வாழ்த்து பாடலை “பக்தி சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன்” என்று கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் முயற்சிகள் என சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் “தமிழ் தாய் வாழ்த்தில் கவனக் குறைவாக (?) ஒரு வரி விடுபட்டது. கவனச் சிதறலால் இது நிகழ்ந்துள்ளது. தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

ஆளுநர் முன்னிலையில் நடந்த தவறை, பாடலை துல்லியமாக, பக்தி சிரத்தையுடன் பாடும் ஆளுநர் ஏன் சுட்டிக்காட்டி, அதனை திருத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.. தவறை திருத்தி சரியாக மீண்டும் ஒரு முறை பாடச் சொல்லியிருந்தால் அவரது ‘நேர்மையை’ உணர முடியும். ஆனால், தொன்மை சிறப்பு கொண்ட திராவிடத்தின் பெருமையை சிறுமைபடுத்தும் வகையில் நடந்து கொண்டு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டிவிட்டு, இந்தி மொழி வெறியை வெளிப்படுத்தியதை மறைத்து முதல்வர் மீது எதிர் குற்றச்சாட்டை, ஆளுநர் கூறுவது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தகுதியான பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற முறையில் பேசுவதையும், செயல்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த எதிர்மறை அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT