உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகாக காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் இந்தியர்களைப் பரிசீலிக்காமல் வெளிநாட்டவர்க்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை அமைச்சக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள்..
2017-ல் இதய மாற்று அறுவை சிகிச்சையால் பயனடைந்தவர்களில் 25% பேர் வெளிநாட்டவர். அதேபோல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பயனடைந்தவர்களில் 33% பேர் வெளிநாட்டவர். கடந்த சில மாதங்களில் சென்னையில் மட்டும் மூளைச் சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இதயங்களில் மூன்று இதயங்கள் வெளிநாட்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது.
2017-ல் நடைபெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சையில் 31 இதயங்கள் வெளிநாட்டவருக்கே பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 32 நுரையீரல் வெளிநாட்டவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது 4-ல் ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சை வெளிநாட்டவருக்கு சாதகமாக அமைகிறது.
இது குறித்து தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பந்தாரி கூறும்போது, "இந்தியர்களின் இதயம் இந்தியர்களுக்குப் பொருந்தவில்லை ஆனால் வெளிநாட்டவருக்கு மட்டும் சரியாகப் பொருந்துகிறது என்பது ஜீரணிக்க முடியாததாக உள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது. இந்தியர்களின் பண மதிப்பு வெளிநாட்டவரின் பண மதிப்பைவிட குறைவாக இருப்பதே இதற்குக் காரணமோ? வருத்தமாக இருக்கிறது.
ஏழை எளிய இந்திய நோயாளிகளுக்கு உதவாமல் பேராசையில் வெளிநாட்டவருக்கு உதவுவது வருத்தமளிக்கிறது" எனக் கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பான வாட்ஸ் அப் குழுவில் அவர் இவ்வாறு ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்த வாட்ஸ் அப் குழுவில் தமிழக உறுப்பு மாற்று மையத்தின் அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் மருத்துவர் பந்தாரி இப்படி ஒரு கருத்தை வெளியிடக் காரணம், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டவருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்ற செய்தியே.
இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டவர் அதிகம் பயனடைவதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது முதலில் இந்தியருக்குத்தான் முக்கியத்துவம் இந்தியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லை என்றால்தான் அந்த உறுப்பு என்.ஆர்.ஐ.,-க்கு வழங்கப்படும். அப்படி வெளிநாட்டுவாழ் இந்தியரும் இல்லாவிட்டால்தான் அந்த உறுப்பு வெளிநாட்டவருக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
கேரள முதல்வரின் தலையீடு..
மூளைச் சாவு அடையும் நோயாளிகளின் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமலேயே உடல் உறுப்புகள் அகற்றப்படுவதாகவும் ஒரு புகார் இருக்கிறது. கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூளைச் சாவடைந்த நிலையில் அவரது உறவினர்களின் அனுமதி இல்லாமலேயே அவருடைய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை இந்த அறுவை சிகிச்சையைச் செய்துள்ளது. மணிகண்டனிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயமும், நுரையீரலும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதயம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருக்கும், நுரையீரல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது" என பினராயி விஜயன் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணை வேகமெடுத்தபோது சுகாதாரத் துறை டிரான்ஸ்டானின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் மருத்துவர் பி.பாலாஜி விடுவித்தது. சொந்தக் காரணங்களுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது.
உறுப்புகள் வெளிநாட்டவருக்கு எப்படி கொடுக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு, "உடல் உறுப்புகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்குவதற்கு முன்னதாக எங்களுக்கான பிரத்யேக வாட்ஸ் அப் குழுவில் நாங்கள் சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். அதாவது, சம்பந்தப்பட்ட உறுப்பு தேவைப்படும் இந்தியர்கள் யாரும் அப்போதைய சூழலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டுதான் அதை வெளிநாட்டவருக்குத் தருகிறோம்.
சில வேளைகளில் இந்தியருக்காக உறுப்பு ஒதுக்கப்பட்டாலும்கூட அந்த நபர் அறுவை சிகிச்சைக்கு உடற்தகுதி பெறாமல் இருந்தாலோ அல்லது உறுப்பை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தாலோ அதை வேறு ஒரு வெளிநாட்டவர்க்கு மருத்துவமனை பொருத்துகிறது. அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர்கள் சொல்வதை நம்ப வேண்டிய சூழலில்தான் நாங்கள் இருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் இந்தியர் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னதாக காய்ச்சல் வந்துவிட்டதாக நாங்கள் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்றார்.
முக்கிய முடிவு..
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தலைநகர் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணம் அதுவும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணம் சென்னையில் அதிகளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. வெளிநாட்டவர் மட்டுமே செலவு செய்யக்கூடிய அளவுக்கு அந்தக் கட்டணம் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் இந்தியர்களே பயனடையும் வகையில் மாநில அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னரும்கூட நோயாளி குறித்த தரவுகளை சரியாகக் கையாள வேண்டும் என்று யோசனை வழங்கப்பட்டது.