மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த பழ மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என அதை கட்டுவதற்கு ரூ.11 கோடி பணத்தை கொடுத்த வியாபாரிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
மதுரை யானைக்கல், வடக்குமாசிவீதி, சிம்மக்கல், வக்கீல் புதுத்தெரு உள்ளிட்டப் பகுதிகளில் பழமார்க்கெட் செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திராட்சை, ஆரஞ்சு, மா, கொய்யா, ஆப்பிள், பலா மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பல வகை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்தும் ஹைபிரிட் பழங்கள் வருகின்றன. தமிழகம் முழுவதும் இருந்து வரும் மொத்த பழ வியாபாரிகள் இங்கிருந்து பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அதனால் தினமும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
கடந்த காலத்தில் இப்பகுதியில் பெரியளவில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் பழ மார்க்கெட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. தற்போது மதுரையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு சிம்மக்கல், யானைக்கல் வழியாகதான் சென்றாக வேண்டியுள்ளது. ஆரப்பாளையம், பெரியார்நிலையம் பஸ்நிலையங்களையும், ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தையும் இந்த பகுதிகள்தான் இணைக்கிறது.
அதனால், வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் பல மடங்கு பெருகிவிட்டது. இந்த சிம்மக்கல், யானைக்கல் பழமார்க்கெட் கடைகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை பெரியளவில் வியாபாரம் நடக்கிறது. காலை, பகல் நேரத்திலும் வியாபாரம் தொடர்கிறது. அதனால், பழக்கடைக்கு வரும் வாகனங்களால் சிம்மக்கல், யானைக்கல் பகுதியில் நாள் முழுவதும் நெரிசலில் மக்கள் தவிக்கின்றனர்.
இப்பகுதிகளை வாகன ஓட்டிகள் கடந்து செல்வது பெரும் போராட்டமாகி விட்டது. அதனால், கடந்த 2015-ம் ஆண்டு யானைக்கல், வடக்குமாசிவீதி, சிம்மக்கல், வக்கீல் புதுத்தெரு பகுதியில் செயல்படும் பழமார்க்கெட்டை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அருகே மாற்ற மாநகராட்சி முடிவெடுத்தது.
அதற்காக, மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து மாட்டுத்தாவணி அருகே ரூ.11.8 கோடியில் தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த மொத்த பழ மார்க்கெட் கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது வரை கடைகள் கட்டி தயாராக உள்ளது. இந்த மார்க்கெட்டில் 240 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கடையும் 200 சதுர அடி, 350 சதுர அடி, 400 சதுர அடி, 700 சதுர அடி, 800 சதுர அடி உள்ளிட்ட 6 வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. வியாபாரிகளிடம் ஒரு சதுர அடிக்கு 1000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். வியாபாரிகளிடம் மாநகராட்சி குறிப்பிட்ட தொகை மாதவாடகையாக வசூல் செய்யும். மார்க்கெட்டுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர். மற்றொரு புறம் சிம்மக்கல், யானைக்கல் பகுதியில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர், இந்த புதிய ஒருங்கிணைந்த பழ மார்க்கெட் கட்டுமானப்பணியை ஆய்வு செய்தார். பழமார்க்கெட்டில் கடைகள் கட்டுமானம் பணி முடிந்து இருந்தாலும் அதற்கான பாதாள சாக்கடை இணைப்பு, தெருவிளக்கு அமைக்கும் பணிகள் முழுமையாக முடியவில்லை.
கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் இணைப்பு செய்தல், சாலை அமைத்தல், மேல்நிலை தொட்டி கட்டுதல், மின்வசதி செய்தல் உள்ளிட்டப்பணிகள் நடக்கிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மதுரை பழ கமிஷன் வியாபாரிகள் சங்க செயலாளர் முருகாநத்தம் கூறுகையில், “மாநகராட்சி பழ மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றுகிறோம் என்றார்கள். அதற்கும் சம்மதம் தெரிவித்தோம். கடைகள் கட்ட பணம் கேட்டார்கள். வியாபாரிகளிடம் வசூல் செய்து ரூ.10 கோடிக்கு மேல் கொடுத்துவிட்டோம். ஆனால், என்று திறக்கப்படும் என்பதை இதுவரை அவர்கள் சொல்லவில்லை.
இந்த மார்க்கெட் கட்டுவதற்காக வியாபாரிகள், வட்டிக்கு பணம் வாங்கியும், இதுவரை வியாபாரத்தில் சேமித்த பணத்தையும் மாநகராட்சியிடம் கொடுத்துவிட்டு இன்னும் கடையும் கிடைக்காமல் தற்போது இருக்கும் சிம்மக்கல், யானைக்கல் பகுதி கடைகளுக்கும் வாடகை செலுத்துகின்றனர்.
பழ வியாபாரமும் முன்போல் இல்லாததால் வியாபாரிகள், கடனில் மூழ்கி வருகின்றனர். அதனால், மாநகராட்சிக்கு பணம் வசூல் செய்து கொடுத்த எங்களுக்கு வியாபாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். முன்பு மேயர் இருந்தால் முறையிட வாய்ப்பு இருந்தது. அதிகாரிகளுக்கு எங்களுடைய வலி தெரியவில்லை” என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகரிடம் கேட்டபோது, “ஜீரோ பட்ஜெட்டில்தான் வியபாரிகளிடம் பணம் வாங்கி இந்த மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ரோடு, பெயிண்ட்டிங் வேலைதான் பாக்கி உள்ளது. ஜூலை இறுதியில் திறக்க வாய்ப்புள்ளது” என்றார்.