தமிழகம்

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முடிக்கப்படாத சாலை வெட்டும் பணிகளால் சென்னை மாநகர மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் முடிக்கப்படாத சாலை வெட்டும் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி, பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கேபிள் பதிக்கும் பணிகள், மின் வாரிய கேபிள் பதிக்கும் பணிகள் போன்றவற்றில் ஏதோ ஒன்றுக்காக ஆண்டு முழுவதும் சாலையை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சேவைத்துறைகள் மாநகராட்சியுடன் ஒன்றிணைந்து, கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்.3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிந்தும் இந்த சேவைத்துறைகள், பணிகளை காலத்தோடு முடிக்காமல் விட்டுவிடுகின்றன.இதனால் பருவமழை தொடங்கும்போது அவற்றில் மழைநீர் தேங்கியும், இப்பணிகளால் சாலை சுருங்கியும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.

சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், இதுபோன்ற சேவைத்துறை பணிகள் முடிக்கப்படாத இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு ஆளாயினர். எனவே பருவமழை காலங்களில் சேவைத் துறைகள் சாலைகளை வெட்டக் கூடாது என்பதையும், தொடங்கிய பணிகளை விரைந்துமுடிப்பதையும் மாநகராட்சி உறுதிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT