சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பையும் கண்டு கொள்ளாமல் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தனியார் பள்ளிகள் முனைப்பு காட்டின. இந்நிலையில் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளையும் ஒத்திவைக்க வேண்டும். கனமழை மற்றும் தீவிரக்காற்று வீசும் சூழலில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் தவிர்க்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டும் சென்னையை அடுத்த தாம்பரம் உட்பட சில பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை திட்டமிட்டபடி நடத்தி முடித்தன. மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சில பள்ளிகள் தரப்பில் அழுத்தம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.