தமிழகம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர்!

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர் புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி புதுச்சேரி அடுத்துள்ள விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியில் விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச்சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் விஜய் படத்துடன் முதல்வர் ரங்கசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் ‘2026-ல் ஆளப்போறான் தமிழன்’ என்ற வாசகத்துடன் வேட்டி - சட்டையுடன் விஜய் நடந்து வருவது போலவும், மறுபுறம் முதல்வர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போலவும் இடம் பெற்ற பேனரில் ஒரு புறத்தில் முதல்வர் ரங்கசாமி படமும் இடம் பெற்றுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடம்பெற்றுள்ள ஆட்சி நடக்கிறது. இதன் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். அவரது நண்பரான புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜயை ரங்கசாமி ஏற்கெனவே சந்தித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்தும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு கட்சி விளம்பரத்தில் முதல்வர் ரங்கசாமி இடம் பெற்றுள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT