சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், சிஐடியூ தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் புதிதாக தொழிற்சங்கத்தை தொடங்கினர்.
அதைப்பதிவு செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்களது தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி எல்லன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
. அதில், சாம்சங்நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்துக்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங்நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்களது தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும், கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சாம்சங் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இருந்தாலும் அதுதொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
நாளை விசாரணை: அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று சாம்சங் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை நாளை (அக்.16) விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.