சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் ரவுடிகள் குறித்த கருத்துக்கு திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுன்ட்டர் செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்த காட்சிகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அதன்படி மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி மணிக்குமார் மற்றும் உறுப்பினர் கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி மணிக்குமார், “ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்றபோது அருண் கூறியிருந்தார்.
அதன் அர்த்தம் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு தெரியாது என உதவி ஆணையர் பதில் அளித்ததால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் ஆகியோரை அக்.14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிஇருந்தது. அதன்படி திருவொற்றியூர் உதவி ஆணையர் இளங்கோ மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு சென்றார்.