சென்னை: கடந்த 2015 பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக, மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதிப்பதாக கார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் வெள்ளம், புயல் அபாயத்தின்போது சென்னை நீருக்குள் மூழ்கி மீள்வது வழக்கம்.
கடந்த ஆண்டு வேளச்சேரியில் பெய்த கனமழையால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால், தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டுச் சென்றனர். சென்னை வேளச்சேரி சாலை - ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 80 அடி பள்ளத்தில் பெருமளவில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கான கார்களும், இரு சக்கர வாகனங்களும் பழுதடைந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, அக்.15, 16 மற்றும் 17ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழையும், அக்.16ம் தேதி சென்னையில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது. மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் கடந்தாண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில், முன்னெச்சரிக்கையாக, தங்களது கார்களை வேளச்சேரி பாலத்தில் கொண்டு வந்து நிறுத்துவதாக கார் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் வசிக்கும் சிலர், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி, குடியிருப்பின் மேல் தளத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், ஆரம்பத்தில் ஒரு பக்கமாக கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பாலத்தின் இரண்டு புறங்களிலும் பொதுமக்கள் தங்களது கார்களை வரிசையாக நிறுத்தினர். இதனால், வேளச்சேரி மேம்பாலம் தற்காலிக பார்க்கிங் ஏரியா போல மாறியது.
ரூ.1,000 அபராதம் விதிப்பா? - இந்நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, போக்குவரத்து காவல் துறையினர், ஒரு சில கார்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கார்களை அப்புறப்படுத்தாதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அபராதம் விதித்தாலும், தங்களது கார்களை அங்கிருந்து எடுக்கப் போவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.