தமிழகம்

‘கூல் லிப்’ பாக்கெட்டுகளில் மண்டை ஓடு படம் அச்சிடப்படாதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

கி.மகாராஜன்

மதுரை: கூல்-லிப் போன்ற போதைப் பொருள் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு படம் அச்சிடப்படாதது ஏன் என குட்கா நிறுவனங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் போதைப் பொருள் விற்பனை வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவாக இருப்பவர்கள் தாக்கல் செய்த ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். முந்தைய விசாரணையின் போது, "கூல்-லிப் போன்ற போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவித்து, அந்தப் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் கூல்-லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தெலங்கானா, கர்நாடகாவைச் சேர்ந்த 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பத்து சதவீதம் சிறார்கள் ஏதேனும் ஒரு போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். குடும்பப் பிரச்சினை, தனிநபர் துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் போதை மருந்து பழக்கத்துக்கு சிறார்கள் உட்படுகின்றனர்.

கூல்-லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கோட்பா (COTPA) விதிகளால் முறைப்படுத்தப்படுகிறது. இந்த விதிப்படி பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகங்கள், புகைப்படங்கள் அச்சிடப்படுகிறது. சில மருந்துகளை (சிரப்) போதைக்காக பயன்படுத்துவதும் நடைபெறுகிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்றார்.

பின்னர் நீதிபதி, "மத்திய அரசு மெல்லும் வகையிலான போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்கள் அதை பின்பற்றி வரும் நிலையில், அந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கூல்-லிப் தயாரிப்பு நிறுவனங்கள் கோட்பா விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? அதோடு அதன் மீது இருக்கும் எச்சரிக்கை வாசகமாக, ‘டுபாக்கோ யூசர்ஸ் டை யங்கர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாசகத்தை. ‘புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்’ எனப் பொருள் கொள்ளாமல், ‘இறக்கும் போதும் இளமையாக இருக்கலாம்’ எனத் தவறாக புரிந்துகொண்டால், அது விளம்பரம் போல் ஆகிவிடும். எனவே, கோட்பா சட்ட விதி 7-ன் கீழ் புகையிலை போதைப் பொருள் பாக்கெட்டுகளில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓடு படம் அச்சிடப்பட வேண்டும்.

இது தொடர்பாக குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். மேலும், போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க வேறு என்ன மாதிரியான எச்சரிக்கைகள் வழங்கலாம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். விசாரணை அக். 16க்கு ஒத்திவைக்கப் படுகிறது" என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT