மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய் உபரிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் வயல்வெளிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மதுரை மாவட்டத்திலுள்ள ஓரளவுக்கு பெரிய கண்மாய்களில் ஒன்று வண்டியூர் கண்மாய். ஒரு காலத்தில் சுமார் 687.36 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த இக்கண்மாயில் 107.03 மில்லியன் கனஅடி வரை தண்ணீரை தேக்க முடிந்தது. இதன் மூலம் 963 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பூ மார்க்கெட், நெல் மண்டி நிலையம் போன்றவற்றால் 576.36 ஏக்கராக கண்மாய் சுருங்கிவிட்டது. அத்துடன் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் முழுமையான அளவுக்கு கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.
பெரும்பாலும், மழைக்காலத்தில் இக்கண்மாயிக்கு சாத்தையாறு அணையின் உபரி நீரும், புதூர், கடச்சனேந்தல் உள்ளிட்ட பிற பகுதியில் சேகரமாகும் நீரும் வந்து சேரும். கண்மாய் முழு கொள்ளளவை எட்டும்போது வைகையாற்றிற்கு உபரி நீர் வைகையாற்றில் திறந்துவிடப்படும். இதற்கான பிரதான கால்வாயும் உள்ளது. ஆனால் தற்போது, இக்கால்வாய் கரையின் இருபகுதியிலும் குடியிருப்புகள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. இதனால் வண்டியூர் கண்மாயியின் உபரி நீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மதுரையில் பெய்த மழையால் வண்டியூர் கண்மாயில் தண்ணீர் அதிகரித்து, உபரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல், கரைகள் பலமின்றி, முட்புதர்கள் மண்டி இருப்பதால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் வயல்வெளியிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ஜெ.ஜெ நகர், ஆவின் நகர், சிவசக்தி நகர், சங்கு நகர் போன்ற வழியோர குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சங்கு நகர் அருகே பாதாள சாக்கடை பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகளையும் தண்ணீர் அடித்துச் சென்றது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ''ஆண்டுதோறும் மழை, வெள்ளக் காலங்களில் வண்டியூர் கண்மாயின் உபரிநீர் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தாமல் விடுவதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்கிறது. இக்கால்வாயின் கரைகளை உயர்த்தி இருபுறமும் சாலை அமைக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது. மழை நேரத்தில் மட்டும் அதிகாரிகள் இக்கால்வாய் பற்றி யோசிக்கின்றனர். அதன் பிறகு இப்பக்கமே வருவதில்லை. கால்வாய் கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.
பொதுப் பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''கடந்த ஓராண்டுக்கு முன்பே இக்கால்வாய் தூரவாரப்பட்டது. அதன் பிறகு புதர் மண்டியிருக்கலாம். கால்வாயின் ஒரு பகுதியில் சாலை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. மழை தொடங்கியிருப்பதால் மேலும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகாமல் இருக்க கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் சீரமைக்கப்படும்'' என்றார்.