தமிழகம்

பிஎட் கலந்தாய்வு அக்.21-க்கு தள்ளிவைப்பு: கல்லூரி கல்வி ஆணையர் அறிவிப்பு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: நாளை (அக்.15) நடைபெறுவதாக இருந்த பிஎட் கலந்தாய்வு கனமழை எச்சரிக்கை காரணமாக, அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி இன்று (அக்.14) மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் நாளை (அக்.15) நடைபெறவிருந்த பிஎட் கலந்தாய்வு (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகள்) கனமழை காரணமாக, அக்டோபர் 21-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும்,என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும், அக்.15ம் தேதி,டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும், என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT