தமிழகம்

சொத்து வரி உயர்வால் மதுரை மாநகராட்சிக்கு நெருக்கடி: திமுக, கூட்டணி கட்சிகளுக்கும் பின்னடைவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை; 6 சதவீதம் சொத்து வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பும் நிலையில், அடுத்ததாக ஆட்சியரை சந்தித்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி முறையிடத் தொடங்கியுள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏ, மற்றும் கவுன்சிலர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுக்கு முன்புதான் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, தற்போது மீண்டும் 6 சதவீதம் சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. மாநகராட்சி பழைய 72 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து மாநகராட்சி சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் 28 வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு தற்போது வரை பழைய நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி சொத்து வரிகளே வசூல் செய்யப்படுகிறது.

இப்பகுதி சொத்து வரியை மாநகராட்சி, பழைய 72 வார்டுகளில் உள்ள கட்டிடங்களுக்கு இணையாக வசூலிக்க தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேசமயம், இந்த புறநகர் 28 வார்டுகளில் புதிதாக வீடு, வணிக வளாகம் கட்டுவோருக்கு மாநகராட்சி பழைய 72 வார்டுகளைப் போல் மாநகராட்சி அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் புதிதாக வீடு கட்டி குடியிருப்போருக்கு அதிகமான வரியும், பழைய வீடுகளில் வசிப்போருக்கு குறைவான வரியும் பாராபட்சமாக சொத்து வரி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த மாநகராட்சி பழைய 72 வார்டுகளைச் சேர்ந்த குடியிருப்பு சங்கள், பொதுமக்கள், வணிகர்கள் போன்றவர்கள், தற்போது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி மனு அனுப்பி வருகிறார்கள். மேலும், மாவட்ட ஆட்சியரை திங்கட்கிழமை தோறும் சந்தித்து மனு வழங்கும் இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் அதிமுக முதல் ஆளாக சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டத்தை நடத்தியது. திமுக கூட்டணி கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகளும், அதன் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர்களும் இதுவரை பொதுமக்களுக்கு ஆதரவாக மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மாநகராட்சிப் பகுதியில் திமும மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்துமுடித்த பின்பே அப்பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி அடிப்படையிலே அப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. தற்போது புறநகர் வார்டுகளில் பாதாளச் சாக்கடை, குடிநீர், சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் விரைவில் அந்தப் பகுதிகளிலும் பழைய வார்டுகளில் வசூல் செய்வதைப் போல வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT