சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டை எட்டியதையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: உலகின் ஆகச்சிறந்த தத்துவமான இந்துத்துவத்தை பிரபஞ்சத்துக்கு அளித்த ஆர்எஸ்எஸ் எனும் மாபெரும் அமைப்பு நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியது.
பேரிடர் காலங்களில் மக்களின் கண்ணீர் துடைத்து ஆர்எஸ்எஸ் ஆற்றி வரும் அரும்பணிகள் ஏராளம். பாரத நாட்டின் பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்கவும், துண்டாடப்பட்ட தேசத்தை மீண்டும் இணைத்து பாரதத்தை பெரும் நாடாக்குவதற்கும் உறுதி ஏற்போம். உலகின் குருவாய் பாரதமாகிட உன்னத சக்தி வளர்ப்போம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேச ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, அனைத்துத் தரப்பு மக்களும் சரிசமம் என்ற சமத்துவ சமுதாயம் ஆகிய உயரிய கொள்கைகளுடன் இயங்கிவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று,நாட்டுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்பதாகும். அந்த வகையில்அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அமைப்பின் நிறுவனரான மறைந்த டாக்டர்.ஹெட்கேவார், விடுதலை போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர்.
சுதேசி இயக்கத்திலும், காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு முக்கியமானது. சமூகரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து, நமது அன்றாட வாழ்க்கையில் சமூகநீதி பிரதிபலிப்பதை உறுதி செய்ய ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. நூறாவது ஆண்டிலும், இன்னும்இளமையோடும், துடிப்போடும், நாட்டு நலனுக்காகவும், பொதுமக்களின் ஒற்றுமைக்காகவும், தன்னலமின்றி செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் பேரியக்கம், மேலும் பலப் பல நூற்றாண்டுகள் சீரிய முறையில் தொடர்ந்து இயங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.